இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 157 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
கடந்த 2ஆம் திகதி கெனிங்டன்- ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட்டது.
இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸிற்காக 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சர்துல் தாகூர் 57 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் ரொபின்சன் 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் கிரைஜ் ஓவர்டொன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஒல்லி போப் 81 ஓட்டங்களையும் கிறிஸ் வோக்ஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தாகூர் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 99 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியக் கிரிக்கெட் அணி, 466 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அத்துடன் இங்கிலாந்து அணிக்கு 368 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 127 ஓட்டங்களையும் புஜாரா 61 ஓட்டங்களையும் தாகூர் 60 ஓட்டங்களையும் ரிஷப் பந்த் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் ரொபின்சன் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜோம்ஸ் எண்டர்சன், கிரைஜ் ஓவர்டொன் மற்றும் ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 368 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 210 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி 157 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஹசீப் ஹமீட் 63 ஓட்டங்களையும் ரொறி பர்ன்ஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா, ஜடேஜா மற்றும் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக சதம் விளாசிய இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தெரிவுசெய்யப்பட்டார்.