ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வடகிழக்கே அமைந்துள்ள பஞ்ஷீர் பள்ளத்தாக்கையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை நிரூபிக்கும் வகையில், நேற்று (திங்கட்கிழமை) தலிபான்கள், இப்பகுதியில் கொடியேற்றுவதைக் காட்டும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
எனினும், தேசிய எதிர்ப்பு முன்னணி எனும் கிளர்ச்சிக் குழு, தாங்கள் முக்கியமான நிலைகள் அனைத்திலும் இன்னும் இருப்பதாகவும் தொடர்ந்து சண்டையிடுவோம் என்றும் தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் தலிபான்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் அகமது மசூத் வலியுறுத்தியுள்ளார்.
மலைப் பாங்கான பிரதேசமான பஞ்ஷீர் பள்ளத்தாக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மிகச்சிறிய மாகாணங்களில் ஒன்றாகும்.
அமெரிக்கா உட்பட மேற்குலகப் படைகள் பின் வாங்கத் தொடங்கி ஒரு சில வாரங்களிலேயே, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும், 1.5 – 2.0 இலட்சம் பேர் வாழும் பஞ்ஷீர் மாகாணம் மட்டும் தலிபான்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தது. தற்போது இந்த மாகாணத்தையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
1980களில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகவும், 1990களில் தலிபான்களுக்கு எதிராகவும் தற்போதைய பஞ்ஷீர் போராளிகள் அமைப்பின் தற்போதைய தலைவர் அஹ்மத் மசூத்தின் தந்தை அஹ்மத் ஷா மசூத் போரிட்டவர் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்த மாகாணப் படையில் முன்னாள் ஆப்கான் அரசப் படை வீரர்கள், உள்ளூர் ஆயுதமேந்திய வீரர்கள் இருக்கின்றனர்.