தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
டெட்டோவோ நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா மருத்துவமனையில் புதன்கிழமை இரவு இந்த தீவிபத்து ஏற்பட்டது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகள், டெட்டோவோ நகரத்தின் ஒரு முக்கிய வீதிக்கு அருகில் ஒரு கட்டடத்தில் தீப்பிடித்து எரிந்ததையும், கருப்பு புகை மேகத்தை காற்றில் பறப்பதையும் காட்டியது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்தால், இந்த விபத்து ஏற்பட்டிருக்காலம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்களில் மருத்துவப் பணியாளர்கள் யாரும் இல்லை.
இந்த தீ விபத்து குறித்து சுகாதார அமைச்சர் வெங்கோ பிலிப்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. ‘இது மிகவும் சோகமான நாள். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தீவிபத்தின் போது கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையத்தில் இருந்த 26 நோயாளிகளில், 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் மற்றும் அபாய கட்டத்தில் இருந்தனர்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் இந்த தீ விபத்தை பயங்கர விபத்து என்று விரித்தார், ஆனால் கூடுதல் விவரபங்களை அளிக்கவில்லை.
அடையாளம் தெரியாமல் உடல் கருகி உயிரிழந்தவர்களை அடையாளம் காண தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 20 லட்சம் மக்கள்தொகை கொண்ட வடக்கு மாசிடோனியாவில் 30 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்மைக் காலமாக அங்கு தினசரி கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிதாக தற்காலிக கொரோனா மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன