அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உளவு, வர்த்தகம் மற்றும் கொரோனா பெருந்தொற்று உருவான விதம் ஆகிய காரணங்களால் சீனா – அமெரிக்கா உறவு மோசமாகியுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகின்றது.
தொலைபேசியில் உரையாடிய இரு தலைவர்களும், விரிவான, கேந்திர ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும், ஒத்த கருத்துடைய விஷயங்கள், மாறுபடும் விஷயங்கள் என இரண்டையும் விவாதித்ததாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் போட்டி சண்டையாக மாறிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு இரு நாடுகளுக்கும் உள்ள பொறுப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரச ஊடகமான சிசிடிவி, ‘இந்த தொலைபேசி அழைப்பு எதேச்சையானது என்றும், ஆழமானது என்றும் தெரிவித்துள்ளது. விரிவான கேந்திர பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இருதரப்பு சார்ந்த பல விடயங்களை பேசியதாகவும்’ தெரிவித்துள்ளது.
சீனா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவை பேண முடியுமா என்பது உலகின் எதிர்காலத்திற்கும் முக்கியமானது என ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்ததாக சிசிடிவி தெரிவித்துள்ளது.