கிழக்கு மத்திய தரைக்கடலில் துருக்கியுடன் பதற்றம் நீடித்து வருவதால், மேலும் ஆறு ரஃபேல் போர் விமானங்களை வாங்க கிரேக்கம் திட்டமிட்டுள்ளது. கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், கிரேக்க ஊடக அறிக்கையின்படி, ஏதென்ஸ் நான்கு புதிய போர் கப்பல்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஜனவரியில், கிரேக்கம் 18 விமானங்களுக்கு முன்பதிவு செய்தது. அவற்றில் 12 விமானங்கள் 2.5 பில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கிரேக்கத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட 18 ரஃபேல் ஜெட் விமானங்களில், 12 தற்போது பிரான்ஸில் சேவையில் உள்ளன மற்றும் ஆறு புதிய விமானங்கள் டசால்ட் ஏவியேஷன் மூலம் உருவாக்கப்படும்.
ஆண்டு நடுப்பகுதியில் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் விமானங்களை தயார் செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டசால்ட் ஏவியேஷன் தயாரித்த போர் விமானங்களை வாங்கிய முதல் ஐரோப்பிய நாடு கிரேக்கம் ஆகும்.
மே மாதத்தில், குரோஷியா ரஃபேல்ஸை வாங்கிய இரண்டாவது ஐரோப்பிய நாடாக மாறியது. முன்பு பயன்படுத்தப்பட்ட 12 விமானங்களைத் அந்த நாடு வாங்கியது.
கட்டார், எகிப்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் டசால்ட்டின் மிகப்பெரிய ரஃபேல் வாடிக்கையாளர்கள் ஆகும்.
அண்டை நாடான துருக்கியுடன் பதற்றம் அதிகரிக்கும் நேரத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனது ஆயுதப் படைகளை நவீனப்படுத்துவதற்காக 11.5 பில்லியன் யூரோக்களை கிரேக்கம் ஒதுக்கியுள்ளது.
கிரேக்கமும் துருக்கியும் கடந்த ஆண்டு கிழக்கு மத்திய தரைக்கடலில் எரிவாயு ஆய்வு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இராணுவ மோதலை நெருங்கின.
இரண்டு நேட்டோ உறுப்பினர்களுக்கிடையேயான உறவு, கடந்த ஆண்டு அடிக்கடி மோசமடைந்தது, கடல் எல்லைகள் மற்றும் எரிசக்தி உரிமைகள் தொடர்பான சர்ச்சையில் போர்க்கப்பல்கள் கிழக்கு மத்திய தரைக்கடலில் எதிர்கொண்டன.