யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்தவரின் மனைவி உள்ளிட்ட இருவரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் அவரது மனைவியான 28 வயதுடைய பெண் மற்றும் அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்.குற்றப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று (திங்கட்கிழமை) முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது வழக்கை விசாரித்த நீதவான், குறித்த இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
அதாவது, தகாத உறவை பேணிய நபரை காப்பாற்ற, கொல்லப்பட்டவரின் மனைவி மாறுபட்ட வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்..
மேலும், கொல்லப்பட்டவரின் மனைவியுடன் தொடர்புடையவரும், கொலையுடன் தொடர்புள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
அதனை முதலாவது சந்தேகநபரான கொல்லப்பட்டவரின் மனைவியும், தனது வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார்.
எனினும் அதன்பின்னர் தனக்கும் இரண்டாவது சந்தேகநபருக்கும் தொடர்புள்ளமை உண்மை.ஆனால் கொலையை தான் மட்டுமே செய்ததாகத் தெரிவித்தார்.
இருப்பினும் பின்னர், இரண்டாவது சந்தேகநபர் காலினால் தனது கணவனின் கழுத்தை பிடித்து வைத்திருந்தபோதே, தேங்காய் துருவல் கட்டையால் தாக்கியதாக ஒத்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, 2ஆவது சந்தேகநபருக்கு 40இற்கு மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வன்புணர்வு வழக்குகள் நிலுவையில் உள்ளன என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.