சுகாதார பரிசோதர்களுக்கு வழங்கப்படுவது போன்று கிராமசேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
உண்மையிலேயே இன்று இந்த கொரோனா சூழல்நிலையினை எடுத்துக்கொண்டால், இலங்கையில் வடக்கு, கிழக்கு என்ற மாகாணங்களிலேயே உண்மையில் கொரோனா தொற்று நோயாளர்களுடைய எண்ணிக்கையும், மரணங்களுடைய எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது.
அந்தவகையில் குறித்த மாகாணங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சுகாதார துறையினரை சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோன்று உண்மையிலேயே பேசப்படாத ஒரு பிரிவினராக காணப்படும் கிராமசேவகர்கள் பற்றியும் நாங்கள் பேசவேண்டும். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், சுகாதார பரிசோதர்களுக்கு வழங்கப்படுவது போன்று கிராமசேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
இலங்கையில் கடந்த ஒரு மாதகாலமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள், ரயில்கள் பயணிக்காத பயணத்தடையாகவே இது காணப்படுகின்றது. ஏனைய அனைவரும் வீதிகளில் பயணிக்கின்றனர்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.