கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களுக்கு செலுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பற்றி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை நீக்குவதாக யூடியூப் (YouTube) மீண்டும் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை மற்றும் ஆட்டிசம், புற்றுநோய் அல்லது கருவுறாமை ஆகியவற்றை ஏற்படுத்தும் காணொளிகள் அகற்றப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் தடுப்பூசி போடுவதில் மக்கள் சந்தேகம் கொள்வதற்கு சமூக ஊடக தளங்கள் பெரும்பாலும் பொறுப்பாகும் என்றும் இந்த பிரச்சினையை தீர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் கூகிளுக்குச் சொந்தமான யூடியூப், கடந்த ஆண்டு முதல் கொரோனா தடுப்பூசிகளைப் பற்றி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்திற்கு தடை விதித்தபோது, 1 இலட்சத்து 30 ஆயிரம் காணொளிகள் அதன் தளத்திலிருந்து அகற்றப்பட்டதாகக் கூறியது.
இதேவேளை தடுப்பூசிகள் தொடர்பான தனிப்பட்ட சாட்சியங்கள், தடுப்பூசி கொள்கைகள் பற்றிய உள்ளடக்கம், புதிய தடுப்பூசி சோதனைகள் மற்றும் தடுப்பூசி வெற்றி அல்லது தோல்விகள் பற்றிய வரலாற்று காணொளிகள் தளத்தில் இருக்க அனுமதிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.