தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 80பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 5 பேர் தலை துண்டிக்கப்பட்டதாகவும் சிறைத் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈக்வடார் வரலாற்றில் மிக மோசமான சிறைச்சாலை படுகொலை என்று அதிகாரிகள் இந்த கலவரத்தினை விபரித்துள்ளனர்.
இத்தாக்குதலில் கத்திகள், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் இருக்கும் லிட்டரல் சிறையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை இருதரப்பு கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.
இதில் முதற்கட்டமாக லாஸ் வெகோஸ் மற்றும் லாஸ் கேனரஸ் என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இது கலவரமான மோதலில் 24பேர் உயிரிழந்ததோடு 48 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிட்டதட்ட 5 மணி நேர போராட்டதிற்குப் பின்பே கலவரம் அடக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி கில்லர்மோ லாசோ, ஈக்வடாரின் சிறை அமைப்பில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார், பொலிஸ்துறை மற்றும் இராணுவ வீரர்களை மற்ற அதிகாரங்களுக்கிடையில் சிறைச்சாலைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் அனுமதித்தது.
ஈக்வடாரில் மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும் என்கிற சூழலில் அதைவிட அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது சிறைகளில் பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடுகிறது. குற்ற வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்படும் போதை பொருள் கடத்தல்காரர்கள், கொலையாளிகள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தனிதனி குழுக்களாக பிரிந்து அடிக்கடி குழு மோதல்களில் ஈடுபடுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க ஆயிரக்கணக்கான சிறை கைதிகளை கண்காணிக்க வெறும் 1,500 சிறை காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள பல சிறைகளில் சிறை அதிகாரிகளை விட கைதிகளின் கையே ஓங்கியுள்ளது.