மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று தாமும் தமது அரசாங்கமும் செயற்படவில்லை என்பது குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமையை தாம் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் வாக்குறுதி அளித்தபடி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் என அவர் உறுதியளித்தார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற 72ஆவது இராணுவ வருட பூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கையூட்டல் மற்றும் மோசடி ஆகியவற்றுக்கு இடமளிக்காது சகல அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், மீண்டும் பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதங்கள் ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாப்பதில் தாம் உறுதியுடன் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தற்போது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென்றும் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அதிகளவான மக்கள் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அதனூடாக அதிகளவு அந்நியச் செலாவணி கிடைக்கின்றது எனவும் அதற்காகக் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் வருடங்களில் நாட்டை சுபீட்சத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.