வர்த்தக நிபுணர்களின் ஆலோசனை அன்றி, அரசியல்வாதிகளின் தேவைக்கேற்க சர்வதேச வர்த்தகங்களை மேற்கொண்டதன் விளைவாகவே, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதமரான மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் நினைவு நாளை முன்னிட்டு, இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்று விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றிலேயே விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும்.
இன்னும் கொஞ்சம் காலம் சென்றவுடன், என்னால் எனது சொந்த ஊரான பொலன்னறுவைக்கு செல்ல முடியுமோ தெரியவில்லை. அவ்வளவு தூரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆளும் அரசாங்கத்தின் மீது இதுதொடர்பாக குற்றம் சுமத்தப்படுகிறது.
ஆனால், இந்த பிரச்சினைக்கு இந்த அரசாங்கம் மட்டும் காரணமில்லை என நான் உறுதியாக சொல்வேன்.
டொலர் பிரச்சினையே இதற்கு முக்கியமான காரணமாகும். வெளிநாட்டு வர்த்தகத்தை முறையாக மேற்கொள்ளாததன் விளைவாகவே இந்த நிலைமைக்கு நாம் முகம் கொடுத்து வருகிறோம்.
வர்த்தக நிபுணர்களின் ஆலோசனைகள் இன்றி, அரசியல்வாதிகளின் தேவைக்கேற்க இந்த விவகாரத்தை கையாண்டமையாலேயே இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
1977 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறான பிரச்சினைக்கு நாம் முகம் கொடுத்துக் கொண்டே தான் வருகிறோம்.
சர்வதேச சதிகளும் இதில் உள்ளன. இவற்றையெல்லாம் மீறி நாம் நாட்டுக்காக எமது பயணத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும்.