குற்றமற்றவர்களை குற்றவாளியாக்கி அவர்களை வருடக் கணக்காக தடுத்து வைக்கும் அதிகாரம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு உள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இதனை சில நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதியான கதிரவேல்பிள்ளை கபிலனின் கைதும் 12 வருட சிறை வாழ்வும் உதாரணம் என்றும் அவர் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சட்டத்திற்கு மட்டுமல்ல ஜனநாயக முகத்தோடு நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இந்தச் சட்டத்தை பாதுகாத்துவரும் ஆட்சியாளர்களுக்கும் மனிதமுகம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
போர்க்குற்றம் புரிந்தவர்கள் நட்சத்திரங்கள் சூடி அதிகார நாற்காலியில் இருப்பது மட்டுமல்ல, இத்தகையவர்களை பாதுகாப்போம் என்று கூறியே பேரினவாதிகள் ஆட்சிபீடத்தில் அமர்ந்து முழு உலகையும் ஏமாற்றி வருவதாகவும் அருட்தந்தை சத்திவேல் குறிப்பிட்டார்.
நீதி என்பது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூரமாக்கப்பட்டுள்ளது என்றும் இதனாலேயே தசாப்தங்கள் கடந்தும் அரசியல் கைதிகள் சிறைக்குள் வாடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே இலங்கையில் இடம்பெற்றது இனஅழிப்பு என ஏற்றுக்கொண்டு அரசியல் நீதியை உறுதிப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அருட்தந்தை சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.