மெக்ஸிகோ மற்றும் கனடாவுடனான தனது எல்லைகளை நவம்பரிலிருந்து, முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
நிலம் மற்றும் படகு கடவைகள் வழியாக, அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக பயணிக்க அனுமதிக்கப்படும் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் இதுகுறித்து கூறுகையில், ‘வழக்கமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என கூறினார். ஆனால், மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறவில்லை.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், அத்தியாவசியமான அல்லது அத்தியாவசியமற்ற கடவைகளுக்கு தடுப்பூசி சான்று தேவை என கூறப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக, மார்ச் 2020ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தனது வடக்கு மற்றும் தெற்கு அண்டை நாடுகளிலிருந்தான பயணத்தை தடைசெய்துள்ளது.
ஆனால், ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், சமீபத்தில் நவம்பர் மாதத்தில் முழு விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று வெளிப்படுத்தியது.
கடந்த வாரம் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், அனைத்து பார்வையாளர்களும் உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மூலம் அவசர பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என்று கூறியது.
தற்போது, ஜோன்சன் அண்ட் ஜோன்சன், ஃபைஸர்- பயோஎன்டெக் மற்றும் மொடர்னா ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அஸ்ட்ராஸெனெகா- ஒக்ஸ்போர்ட், சினோஃபார்ம் மற்றும் சினோவாக் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்றையும் உலக சுகாதார அமைப்பு ஆதரித்துள்ளது.