பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலியாகியுள்ளார்.
கொன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சேர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நேரம் பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் சேர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்ததாகவும் அதன் அடிப்படையில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைதாகிய நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாம் வேறு எவரையும் தேடவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
1983ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் பாராளுமன்ற உறுப்பினராக ஆக இருக்கும் டேவிட் அமேஸுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் டேவிட் அமேஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசியலில் மிகவும் கனிவான, அழகான, மென்மையான மனிதர்களில் ஒருவர் டேவிட் அமேஸ். நாங்கள் இன்று ஒரு நல்ல பொது ஊழியர் ,மிகவும் பிரியமான நண்பர் மற்றும் சக சேவகரை இழந்துவிட்டோம்,” என குறிப்பிட்டுள்ளார்.