ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தெரிவித்து அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த தாக்குதல்களுக்கு பின்னணியில் மிகவும் சந்திவாய்ந்த ஒருவர் இருக்கின்றார் என்பதே இந்த தாமதத்திற்கு காரணம் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதாக பொதுமக்களுக்கு ஜனாதிபதி, தனது தேர்தல் பிரச்சாரத்திம் உறுதியளித்தார் என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டினார்.
மேலும் தேர்தல் வெற்றியின் பின்னரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார்.
அத்தோடு சந்தேகத்திற்குரிய விடயங்கள் குறித்து விசாரணையை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் குறித்த ஆணைக்குழு அறிவுறுத்திய நிலையில் அதனை இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் கொழும்பு பேராயர் குற்றம் சாட்டினார்.
எனவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக என்ன நடந்தது என்ற உண்மையை அறியும் முயற்சியில் சர்வதேச சமூகம் எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்தார்.