கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்கும் ஒப்பந்தம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட கலந்துரையாடலை நடத்த ஆளும்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடித்த இந்த கலந்துரையாடலில் கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் விநியோக ஒப்பந்தம் குறித்த மேலதிக தீர்மானங்கள் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.