மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் பாரிய மனித உரிமை மீறல் இடம்பெற்றிருக்கலாம் என அஞ்சுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி டொம் அன்ட்ரு தெரிவித்துள்ளார்.
மியன்மார் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வருடாந்த ஆய்வறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் மியன்மாரின் இராணுவ அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்ற நிலையில் தற்போது நாடு உள்நாட்டுப் போரின் நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக ஆயிரக்கணக்கான படையினரும் பாரிய கனரக ஆயுதங்களும் மியன்மாரின் வடக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள பகுதிகளுக்கு நகர்த்தப்படுவது குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றதிலிருந்து இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு 8 ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.