இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, அது ஒரு தனிப்பட்ட விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அதானி நிறுவனம் இலங்கையில் உள்ள ஏனைய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயவுள்ளதாக கூறினார்.
முதலீட்டாளர்கள் வருகை தருவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது அரசாங்கங்கத்தின் பொறுப்பு என குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அதானி நிறுவனம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
நேற்று இலங்கைக்கு வந்துள்ள கௌதம் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பார் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தபோதும் ஜனாதிபதி ஊடக பிரிவு இதுவரை அதனை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














