முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றமைக்கான காரணங்களை விளக்கும் இரகசிய அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.
குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றமை தொடர்பாக தொகுக்கப்பட்ட அறிக்கைதம்மிடம் உள்ளதாக தெரிவித்த சட்டமா அதிபர் திணைக்களம், அதனை இரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரியிருந்தது.
அதற்கமைவாக குறித்த அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் கொண்ட அமர்வு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தது.
வசந்த கரன்னகொடவுக்கு எதிராக, நீதிபதிகள் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதாக சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஒக்டோபர் 13 ஆம் திகதியன்று அறிவித்திருந்தார்.
இருப்பினும் குறித்த தீர்மானத்தை எதிர்த்து, கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் நால்வரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமையவே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.