நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது. அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய புதிய தந்திரோபாயங்களை அரசாங்கம் கையாண்டு வருகிறது.
அவ்வாறான ஒரு நடைமுறையாகவே ஒரு நாடு ஒரு சட்டம் என்ற சட்ட மூலத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் (நேற்று) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் காலங்களில் பாரிய நெருக்கடியான நிலைக்குள் நாடு தள்ளப்படும்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது.அதற்குப் பதிலாக தற்போது வருமானத்தை ஈட்டுவதற்கான வழியாக நாட்டை விற்கின்ற முயற்சி நடக்கின்றது.ஒரு புறம் அமெரிக்காவுக்கும் இன்னொரு புறம் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் நாடு விற்கப்படுகின்றது.
அதில் ஒரு முக்கிய கட்டமாக கெரவலப்பிட்டி மின்நிலையம் அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றிற்கு 40 சதவீதம் தாரை வார்க்கப்பட்டிருக்கின்றது. அதன் மூலமாக எதிர்வரும் காலங்களில் எரிசக்தி துறையில் பெரிய நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து இதற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
அதை போன்று ஆசிரியர்கள், விவசாயிகள் போராட்டம் காரணமாக அனைத்து தரப்புக்களும் அரசாங்கத்துக்கு எதிராக கோஷத்தை எழுப்புகின்ற நிலைமை காணப்படுகின்றது. நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது. அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய புதிய தந்திரோபாயங்களை அரசாங்கம் கையாண்டு வருகிறது.
அவ்வாறான ஒரு நடைமுறையாகவே ஒரு நாடு ஒரு சட்டம் என்ற சட்ட மூலத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இந்த நடவடிக்கையை நாங்கள் பார்க்கின்ற பொழுது ஒரு நாட்டில் ஒரே சட்டம் இருந்தால் அது மிகவும் நல்லது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்ற நிலையில் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொழுது இதன் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
ஞானசார தேரருக்கு முழு நாட்டு மக்களின் எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. இந்த அரசாங்கம் ஆட்சிபுரிந்து வருகின்ற பொழுது வியத்மக என்ற புத்திஜீவி அடங்கிய ஒரு குழுவை அமைத்து, அந்த குழு ஊடாகவே நாட்டை ஆளப்போகிறோம் என்று கூறியவர்கள் இன்று ஞானசார தேரர் நியமித்திருக்கிறார். அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். இது ஒரு வெட்கக்கேடான விடயம்.இது தொடர்பாக நாம் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.