COP26 காலநிலை உச்சிமாநாட்டின் முதல் பெரிய ஒப்பந்தத்தில், 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் 2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரவும், மாற்றியமைக்கவும் உறுதியளித்துள்ளனர்.
உறுதிமொழியில் கிட்டத்தட்ட 19.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பொது மற்றும் தனியார் நிதி உள்ளது.
கனடா, பிரேஸில், ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய நாடுகள் உறுதிமொழியில் கையெழுத்திடப்போவதாக தெரிவித்துள்ளன. இந்த நாடுகளில் 85 சதவீத காடுகள் உள்ளன.
சேதமடைந்த நிலத்தை மீட்டெடுக்கவும், காட்டுத்தீயைச் சமாளிக்கவும் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும் சில நிதி வளரும் நாடுகளுக்குச் செல்லும்.
28 நாடுகளின் அரசாங்கங்கள் உணவு மற்றும் பாமாயில், சோயா மற்றும் கோகோ போன்ற பிற விவசாயப் பொருட்களின் உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து காடழிப்பை அகற்ற உறுதியளிக்கும்.
இந்த தொழில்கள் விலங்குகள் மேய்வதற்கு அல்லது பயிர்கள் வளர இடவசதி செய்ய மரங்களை வெட்டுவதன் மூலம் வன இழப்பை ஏற்படுத்துகின்றன.
காடழிப்புடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் முதலீட்டை நிறுத்த உலகின் 30க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் உறுதியளிக்கும்.
இந்த நடவடிக்கையை வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு முந்தைய ஒப்பந்தம், காடழிப்பை மெதுவாக்குவதில் தோல்வியடைந்தது.
மரங்களை வெட்டுவது காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது, ஏனெனில் இது வெப்பமயமாதல் வாயு CO2ஐ உறிஞ்சும் காடுகளை குறைக்கிறது.
கிளாஸ்கோவில் உலகளாவிய மாநாட்டை நடத்தும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், ‘பூமியின் காடுகளைப் பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் ஒரு முக்கிய ஒப்பந்தம் இதுவென’ கூறியுள்ளார்.
காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால் கிளாஸ்கோவில் இரண்டு வார உச்சிமாநாடு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.