மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பது ஒரு பக்கத்திலே நடந்துகொண்டிருக்க, சாதாரணமாக இயற்கையாகவே பயிர் செய்துவந்த பிரதேசங்களிலும் பயிர் செய்யவிடாமல் தடுப்பது என்பது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு.
எனவே, காலங்காலமாக பயிர் செய்து வந்தவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
இந்த நாட்டிலே உணவுப்பஞ்சம் ஏற்பட வேண்டிய தேவையே கிடையாது. செயற்கை இரசாயனத்தை தடை செய்யவேண்டும் என்று திடீரென்று ஓரிரவிலே அதனை தடை செய்கின்ற ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.
நாங்கள் செயற்கை இரசாயனத்திற்கு ஆதரவானவர்கள் அல்ல. இயற்கை முறையில் பயிர் செய்ய வேண்டும்.அது சுகாதாரத்துக்கு நல்லது. நிலத்துக்கு நல்லது. மக்களுக்கும் நல்லது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு நீண்ட காலம் தேவைப்படுகிறது.
பல நாடுகளிலே இருபது வருடத்திற்கான அந்த மாற்றத்திற்கான கால அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். 20 வருட காலமாக செய்யப்பட வேண்டிய ஒரு மாற்றத்தை ஒரு இரவிலே ஜனாதிபதி திடீரென்று விழித்து அதனை செய்ததனாலே ஏற்பட்டிருக்கிற ஒரு பிரச்சனை தான் இது.
இந்த தடவை உள்ளூர் பயிர்செய்கையினாலே வருகின்ற உணவு மக்களுக்கு போதாமல் இருக்கப்போகிறது. ஒரு பாரிய பஞ்சம் நாட்டிலே ஏற்பட போகிறது. அதாவது உணவு பற்றாக்குறை ஏற்படப்போகிறது. இதைப்பற்றி நாங்கள் பல தடவை எச்சரிக்கை செய்திருக்கிறோம் அரசாங்கம் பிடிவாதமாக இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது.
ஆகையினாலே மக்கள்தான் திரண்டு இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். நாட்டிலே பல பாகங்களிலே இதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. மக்களுடைய எழுச்சியினால்தான் இந்த கொள்கையை மாற்ற முடியும், தேவைப்பட்டால் அரசையும் மாற்ற முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.