நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 108 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்னர், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்தது.
கடந்த மாதம் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியது. இந்த சாதனை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதன்பின்னரும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை நேற்று 108 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக நேற்று மாத்திரம் நாடு முழுவதும் 25.50 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.