சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பதவியில் தொடர வழிசெய்யும் தீர்மானத்துக்கு, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரம் படைத்த மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகால வரலாற்றில், கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங் மற்றும் அவருக்குப் பிறகு ஜனாதிபதி டெங் ஜியோபிங் ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது முறையாக இத்தகைய தீர்மானத்துக்கு அக் கட்சியின் மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், ஷி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் சீன ஜனாதிபதியாக தொடருவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.
சீனாவில் இதற்கு முந்தைய ஜனாதிபதி அனைவரும் 2 முறை ஆட்சி செலுத்தியதற்குப் பிறகோ, தங்களுக்கு 68 வயது பூர்த்தியான பிறகோ பதவியிலிருந்து ராஜிநாமா செய்து வந்தனர்.
இந்தச் சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத் திருத்தத்தில், ஒருவர் இரு முறை மட்டுமே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்ற வரம்பு நீக்கப்பட்டது.
இது, ஸி ஜின்பிங்கின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான முன்னேற்பாடாகக் கருதப்பட்டது. 2012ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற ஸி ஜின்பிங்கின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. எனினும் இப்போதுள்ள சர்வதேச சூழ்நிலையில், ஜின்பிங்கே ஜனாதிபதியாக தொடர, சீன கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.
ஸி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய இராணுவ ஆணையம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பையும் முப்படைகளைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி பொறுப்பையும் வகித்து வருகிறார். இதன் மூலம், நாட்டின் 3 அதிகார பீடங்களும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன.