தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 8ஆவது கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது.
இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் இன்று 2000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ் நாரனவரே தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை சென்னையில் 1600 மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற நிலையில், இம்முறை கூடுதலாக 400 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2ஆவது கட்ட தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.