தமிழ் பேசும் கட்சிகளை ஒரு தளத்தில் அணி திரட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான வரவொன்று இந்த ஆண்டு இறுதிக்குள் வரவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே கூறியுள்ள நிலையில் அதுபற்றி விசேட கரிசனை கொள்ளப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
மேலும் இந்தக் கலந்துரையாடலை சுமந்திரன் அமெரிக்காவிலிருந்து மீண்டும் நாடு திரும்பியதும் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் இரா.சம்பந்தன் பங்காளிக்கட்சிகளிடம் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்திருந்தன.
இந்தக் கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்றபோதும் தமிழ்த் தேசியப் பரப்பில் முக்கிய கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பங்கேற்றிருக்கவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் கொள்கை அளவில் ஒற்றையாட்சி அரசியலமைப்பில் காணப்படும் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இல்லை என்று பகிரங்கமாக கூறியுள்ளது.
இந்நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்கக் கோரும் செயற்பாட்டில் தாங்கள் பங்கேற்க முடியாது என்பதையும் அக்கட்சி தர்க்க ரீதியாக நியாயப்படுத்தியுள்ளது.
இதேவேளை சம்பந்தன் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான ஏது நிலைமைகள் இன்மையால் கூட்டத்தினை பிற்போடுமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கேட்டுக்கொண்ட போதும் அது நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் பேசும் கட்சிகளை சந்திக்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.