பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா மாநாட்டில் படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்த வாசகத்தில் இந்தியா முன்வைத்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் கூறுகையில், ”பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் சமத்துவமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
படிம எரிபொருளின் பயன்பாட்டினால்தான் உலகின் சில நாடுகள் பொருளாதாரத்திலும், நல்வாழ்விலும் மேன்மை பெற்றன. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அந்தத் துறையை மட்டும் குறிவைப்பது நியாயமானது அல்ல.
ஒவ்வொரு நாடும், தனது சூழல், வலிமை, பலவீனம் ஆகியவற்றின் அடிப்படையில் கரியமில வாயு வெளியேற்றத்தையும் சுத்திகரிப்பையும் சமநிலைக்கு கொண்டுவரும் இலக்கை எட்டவேண்டும்.
வளரும் நாடுகள் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் அதேநேரம், தங்கள் நாட்டில் வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.