பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் இடையில் காணொலி மூலம் இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
தாய்வான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஜின்பிங்குக்கும் இடையே இன்று (திங்கட்கிழமை) மாலை (சீன நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை) பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. காணொலி மூலம் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியை பொறுப்புணர்வுடன் முன்னெடுத்துச் செல்வது குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து நிலவி வரும் விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துவார்கள்.
அந்தப் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் நோக்கங்கள், முன்னுரிமைகள் குறித்தும் சீனா தொடர்பான அமெரிக்காவின் கவலைகள் குறித்தும் ஷி ஜின்பிங்கிடம் ஜனாதிபதி பைடன் எடுத்துரைப்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக பைடனும் ஸி ஜின்பிங்கும் செப்டம்பரில், சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பில் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.