இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட்டு சர்வதேச ஆதரவினை பெற்றாலே நிரந்தர தீர்வு காண முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”வடக்கு, கிழக்கு தாயக பூமியிலே எங்கள் இனக்குடிபரம்பலை சிதைப்பதற்கும், எங்களுடைய பிரதிநிதித்துவங்களை குறைப்பதற்கும், எங்கள் தாயக பூமியை கூறு போடுவதற்குமான, திட்டமிட்ட காணி அபகரிப்பும், அந்த காணி அபகரிப்பின் ஊடாக, சிங்கள குடியேற்றங்களை கொண்டு வந்து, நிறுவுவதற்கான முயற்சியை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இது கடந்த காலங்களிலும், அரசாங்கங்கள், இதனை செய்து வந்திருக்கின்றன. அண்மையில் பாராளுமன்றத்திலே இது சம்பந்தமான எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட இருக்கின்ற போராட்டத்திற்கு, தமிழீழ விடுதலை இயக்கம் தன்னுடைய முற்றுமுழுதான ஆதரவினை வழங்கும். இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து எங்கள் காணி நிலங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழலில் இன்று இருக்கின்றோம்.
எமது இனக்குடி பரம்பலை பேண வேண்டிய சூழலில் இருக்கின்றோம். இதில் நாங்கள் உறுதியாக, பற்றுறுதியோடு பயணிக்க வேண்டிய சூழல் இன்று இருக்கின்றது. இதைத் தாண்டி நாங்கள் பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பதும், தொடர்ந்து இதற்கு எதிராக போராடுவதும் என்பது நிரந்தர தீர்வாக அமையாது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படும் வரைக்கும் இந்த குடியேற்றங்களை பற்றிய சிந்தனைகள் இருக்கவில்லை.
எங்களுடைய மாகாண சபை சொற்ப அதிகாரங்களோடு செயல்பட்டுக் கொண்டிருந்த போது கூட கடந்த காலங்களில் இப்படியான காணி அபகரிப்பையும், குடியேற்றங்களையும் நிறுத்தி இருந்தது.
இந்த மாகாண சபை அதிகாரங்களை எங்களுடைய அரசியல் தீர்வை எட்டும் வரைக்கும், பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வந்த இந்த மாகாண சபை அதிகாரங்களை, நிரந்தரமாக, மீளப் பெறப்பட முடியாத, காணி அதிகாரங்களை, பெற்றுக்கொள்வதன் மூலம் தான் இந்த பிரச்சனைக்கான நிரந்தர விடிவை நாங்கள் காணமுடியும்.
அதற்கான ஒரு பாரிய அரசியல் நகர்வு ஒன்றை நாங்கள் இப்பொழுது மேற்கொண்டிருக்கிறோம். அனைத்து தமிழ் பேசும் அரசியல் தரப்புக்களும், தமிழ் தேசிய அரசியல் பரப்புகளில் இருக்கும், செயலாற்றுபவர்களும் ஒன்றிணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் இந்த பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை, பலப்படுத்தி நிரந்தரமான அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான அரசியல் நகர்வினை மேற்கொண்டிருக்கிறோம்.
இந்த நகர்விலே இது அரசியல் தீர்வாக அல்ல. ஆனால், எங்களுடைய இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தற்போதைய கால சூழலில் அவசியமான ஒரு விடயமாக கருதியே இதை நாங்கள் நகர்த்தியிருக்கிறோம்.
இதில் இணைந்து கொள்ள அனைத்து தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளையும் அழைத்திருக்கிறோம். எங்களுடைய இந்த நகர்வினை விமர்சித்து கொண்டு, இதில் பங்கு பெற்றாமல், தனித்து பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பதோ, இந்த போராட்டங்களினாலோ மாத்திரம், நிரந்தரமாக தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஆகவே எங்களுடைய அதிகார பலத்தை நாங்கள் பெற்று கொள்வதற்கும் சர்வதேச ஆதரவினை கோருவதற்கும், இலங்கை அரசாங்கத்தினுடைய இந்த செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குமான எங்களுடைய அரசியல் நகர்வு இப்பொழுது வெற்றிகரமாக, நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம்.” என தெரிவித்தார்.