உகாண்டா தலைநகர் கம்பாலாவை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று தாக்குதல்காரர்கள் பாராளுமன்றம் மற்றும் நகரின் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்துள்ளனர்.
குண்டுவெடிப்பால் பலரின் உடல்கள் வீதிகளில் சிதறி இருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக ஐ.எஸ். அமைப்பு கூறியதாக அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நகரின் வேறுபகுதிகளில் இருந்தும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நகரின் மற்றுமொரு பகுதியில் வைத்து நான்காவது தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டதாகவும், வெடிகுண்டு அங்கி மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.