ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்குள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் ஆதரவாளர் ஒருவரை பொலிஸார் தாக்கி கொன்றதாகக் கூறியே, பதாதைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு, குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பொலிஸார் தடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பனாமுரே பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சம்பவத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவே பொறுப்பு எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் குறித்த குற்றச்சாட்டை நிராகரித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சந்தேகநபர் பொலிஸ் அறைக்குள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தன்னை தாக்கியதாக அவரது மகள் அளித்த முறைப்பாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நேற்றிரவு 10.30 மணியளவிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கும் அவரது கைதுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.