அரசாங்கம் தேவையான அதிகாரத்தைப் பெற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன்காரணமாக மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்று பல மணிநேரங்களை வீணடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலமும் அரசாங்கம் தங்களுக்குத் தேவையான அதிகாரத்தைப் பெற்ற போதிலும், அவர்களால் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
உர விவகாரத்தில் அரசு என்ன செய்கிறது? என கேள்வியெழுப்பிய அவர், இதற்கான இழப்பீடு குறித்து வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.