அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொழிலுக்குச் செல்லாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சின்ன நாகவத்தை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாவது, “தேயிலை மலைகள் காடாகி கிடக்கின்றன. கொழுந்து விளைச்சல் குறைவாக இருப்பதால், தற்போது தோட்ட நிர்வாகம் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ கட்டாயமாக பறிக்க வேண்டுமெனவும் நல்ல கொழுந்து எடுத்து கொடுக்க வேண்டுமெனவும் அழுத்தம் கொடுத்து வருகின்றது.
மேலும் குறைவாக கொழுந்து பறித்து கொடுத்தால் கிலோ கணக்கில் சம்பளம் தருகின்றோம் என நிர்வாகம் கூறுகின்றது. இதனால் தொழில் ரீதியாக பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம்” என கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அதிகாரிகளும் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்களும் வருகை தந்ததுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறும் தேயிலை மலைகளை துப்பரவு செய்யுமாறும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், தோட்ட அதிகாரியும் அதனை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றுள்ளனர்.