யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமளவான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – மந்துவில் வடக்கு ஜே/346 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களால் பராமரிக்கப்பட்டு வந்த தென்னந்தோப்புக்குள் இருந்தே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணிக்குள் விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உட்பட பெருமளவான வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் அப்பகுதியை முற்றுகையிட்டு தேடுதல் நடத்திய போதே, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
புலிகளின் தயாரிப்பான டாங்கி எதிர்ப்பு நிலக்கண்ணி வெடிகள், அம்மான் – 3, 23 மிதிவெடிகள், 3 கிளைமோர் குண்டுகள், ரி 56 ரக துப்பாக்கி மகஸின்கள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பெருமளவான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் அம்பிகை நகர் பகுதியில் புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.