இலங்கை தேசிய கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவப்படுத்திய முதுமுதலிகே புஷ்பகுமார Jaffna Kings அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் Jaffna Kings அணியின் சுழற்பந்துவீச்சு பயற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சஜித் பத்திரண 19 வயதுக்குற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டமையினாலேயே இவ்வாறு புதிய சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ஒருவர் Jaffna Kings அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
முதுமுதலிகே புஷ்பகுமார 2019ம் ஆண்டிலிருந்து குவைட் இராச்சியத்தின் பிரதான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராகவும், குவைட் கிரிக்கெட் அபிவிருத்தி முகாமையாளராகவும் பணியாற்றி வருவதுடன் அவரது பயிற்றுவிப்பின் கீழ் குவைட் தேசிய கிரிக்கெட் அணி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
குவைட் தேசிய அணி ஆசிய கிண்ணத்திற்காக தகுதிபெற்றமை முதுமுதலிகே புஷ்பகுமாரவின் பயிற்றுவிப்பின் கீழ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Jaffna Kings உரிமம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “Jaffna Kings என்பது லங்கா பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் ஒரு உரிமம் கொண்ட கிரிக்கெட் அணியாகும்.
அவ்வணியின் உரிமையாளராக இலங்கையில் பிறந்த பிரித்தானியாவின் தொழிலதிபரான அல்லிராஜா சுபாஸ்கரன் திகழ்கின்றார். இவர் லைகா குழும நிறுவனங்களின் நிறுவுனரும் தலைவருமாவார்.
லைகா குழுமமானது ஒரு பிரித்தானிய பன்னாட்டு நிறுவனமாகும். இது தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு, பயணம் மற்றும் சுற்றுலா, உடல்நலம், ஊடகம், தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த குழுமமானது, இந்தியாவிலும் இலங்கையிலும் வலுவான முன்னிலையுடன் தெற்காசிய பிராந்தியத்தில் தனது வணிகங்களை பல்வகைப்படுத்தி வருகின்றது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.