பருத்தித்துறை நகர சபையின் 2022 வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தவிசாளரால் நேற்று(புதன்கிழமை) முன்வைக்கப்பட்டது. வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒரு மேலதிக வாக்கினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 5 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்டை ஆகியவற்றின் உறுப்பினர் தலா ஒருவர் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஆறு பேரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.
இதன்காரணமாக வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் சமநிலை காணப்பட்டதனால் உள்ளூராட்சி மன்றச் சட்டத்துக்கு அமைய தவிசாளர் தனது வாக்கை ஆதரவாக வாக்களித்து ஒரு மேலதி வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பின் போது கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் உடல்நலக் குறைவுடன் காணப்பட்டுள்ளார்.
அவர் வாக்கெடுப்பின் பின்னர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குச் சென்று முன்னெடுத்த பரிசோதனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.