யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா, செயலாளர், பொருளாளர், உப தலைவர் ஆகியோர் யாழ்.இந்திய துணைத்தூதுவரை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்.இந்திய துணைத்தூதுவராலயத்தில் நடைப்பெற்ற குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் அன்னராசா, “நீண்ட காலமாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிராக பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும், தற்போதும் இந்திய மீனவர்களின் வருகை பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இந்த வருகையினை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய தினம், யாழ் இந்தியத் துணைத் தூதரைச் சந்தித்து பேசி உள்ளோம்.
குறிப்பாக 2500 இந்திய மீனவர்களுக்கும் வடக்கு மீனவர்களுக்கும் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இந்தியாவுக்கோ அல்லது தமிழ் நாட்டுக்கோ எதிரான பிரச்சினையாக இதனை எவரும் கருதக்கூடாது. பல கோடி ரூபாய் சொத்துக்களை இழந்து இருக்கின்றோம். எங்களுடைய கடற்றொழில் அமைச்சு, 500 கோடி ரூபாய்க்கு மேல் இந்திய அரசாங்கத்திடம் நஷ்ட ஈடு கோரியுள்ளது
அந்தவகையில் குறிப்பிட்ட தொகையில் அண்ணளவாக 400 மில்லியன் ரூபாயை எங்களுடைய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்குமாறு கூறி அதற்குரிய திட்டம் ஒன்றினை தயாரித்து கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சில் கையளித்திருக்கின்றோம்.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இந்திய துணை தூதுவரிடமும் கையளித்துள்ளோம். எங்களுடைய மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை அதிகரிக்க இந்த 400 மில்லியன் ரூபாய் உதவியினை தொழிலாளர்களுக்கு மானியமாகவும் சுழற்சி முறையில் வழங்குவதற்கு கோரி நிற்கின்றோம்
அந்த கோரிக்கையினை தாம் பரிசீலிப்பதாக யாழ் இந்திய துணை தூதுவர் தெரிவித்துள்ளார்” என அவர் கூறியுள்ளார்.