LPG அற்ற எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை தரத்திற்கு இணங்குகின்றனவா என்பதை பரிசோதிக்க மட்டுமே தமக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என இலங்கை தர நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சித்திக்கா ஜீ சேனாரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தர நிர்ணய நிறுவனம் அனைத்து தரங்களையும் தன்னார்வ தரங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும், எந்தவொரு தரங்களையும் கட்டாயமாக்க அந்த நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வால்வு, ரெகுலேட்டர்கள் மற்றும் நெகிழ்வான குழாய்களுக்கு வழங்கப்படும் தரநிலைகளுக்கு இணங்குவது கட்டாயமானது எனவும் இதனை கண்காணிப்பது நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொறுப்பாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் அடுத்தடுத்து எரிவாயு சிலிண்டர்களினால் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.