இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான Jaffna Kings அணியின் உத்தியோகபூர்வ தொகுப்பாளர்களாக புகழ்பெற்ற அறிவிப்பாளர்களான தேஜானி விஜேசிங்க மற்றும் சமீர் யூனுஸ் ஆகிய இருவரும் இணைந்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Jaffna Kings அணியினால் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நன்கு அறியப்படுகின்ற தேஜானி விஜேசிங்க ஓர் சிறந்த ஊடகவியலாளராவார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தை தனது தொழில் வெற்றி வரை கொண்டு சென்று, ஊடகத்துறையில் அபரிமிதமான புகழைப் பெற்றுள்ள தேஜானி விஜேசிங்க, இளம் வயதிலேயே தனது தொழில் வாழ்க்கையில் நுழைந்து, இன்று தொகுப்பாளராக 21 வருட அனுபவம் கொண்டவராக ஊடகத் துறையில் மிளிர்கின்றார்.
அவர் தற்போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணி புரிகின்றார்.
திறமையான அழகிய குரல் வளமிக்க தேஜானி தொகுப்பாளராகவும், டப்பிங் கலைஞராகவும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் பல நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு வழங்கியுள்ளார்.
இன்று உலகில் விளையாட்டு மற்றும் அதனுடன் தொடர்பான துறையில் அறிவிப்பாளர்களாக ஒரு சில பெண்களே தமது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர். தேஜானியும் அவ்வாறான அரிய திறமையினை கொண்ட அறிவிப்பாளராவார்.
இலங்கையின் முன்னணி தனியார் செய்தி அலைவரிசையொன்றில் முன்னாள் செய்தி தொகுப்பாளராக இருந்த சமீர் யூனுஸ், இன்று புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடசாலை மட்ட மற்றும் உள்ளக கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
அவர் டிஜிட்டல் ஊடக தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். சில முன்னணி கிரிக்கெட் வீரர்களை நேர்கண்டுள்ள சமீர், இன்று கிரிக்கெட் வர்ணனைத் துறையில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
இவர் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் வர்ணனையாளராக செயற்பட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களின் கவனத்தை அவரால் ஈர்க்க முடிந்தது.
இளம் திறமைகளை வளர்த்தெடுக்கும் Jaffna Kings அணியின் நோக்கு இதன் மூலம் மேலும் உண்மைப்படுத்தப்படுகின்றது. தங்களின் பணி ஆடுகளத்தின் எல்லையுடன் மட்டுப்படுத்தப்படுவதில்லை என்பதை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துவதாகவே இந்த தெரிவு அமைந்துள்ளது.
விளையாட்டுடன் தொடர்பான இரு ஆற்றல்மிக்க குரல்கள் எம்முடன் இணைந்து இருப்பதால், 2021 தொடர் முழுவதும் கிரிக்கெட் இரசிகர்களுக்கு எவ்வித சோர்வும் இருக்காது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.