X-Press Pearl கப்பல் விபத்து காரணமாக வருமானத்தை இழந்த கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் விஜித் மலல்கொட, நீதியரசர் ஜனக் டி சில்வா மற்றும் நீதியரசர் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு 7.77 பில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடக் கோரி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன், கலாநிதி அஜந்த பெரேரா மற்றும் ஜெரான் ஜெகதீசன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
X-Press Pearl கப்பல் விபத்து காரணமாக இலங்கையில் மீன்பிடித் தொழிலுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதத்தை மதிப்பிடுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை துறைமுக அதிகார சபை, துறைமுக அதிகார சபையின் தலைவர், கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, கடல் கூட்டமைப்பு Pte. Limited (X-Press Feeders), Sea Consortium Lanka (Pvt.) Limited உள்ளிட்ட தரப்பினர் வழக்கின் பிரதிவாதிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான X-Press Pearl கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளால் 473 கடல் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன.
இதற்கமைய குறித்த பாதிப்புகளால் இதுவரையில் 417 ஆமைகளும், 48 டொல்பின்களும், 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் அண்மையில் நீதிமன்றத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடந்த ஜுன் மாதம் தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.