உரிமை தொடர்பில் பேச்சளவில் மட்டும் பேசிக்கொள்ளும் சமூகமாக இருக்காமல் உண்மையாகவே உரிமையினை உறுதிப்படுத்தக்கூடிய சரியான தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கல்விப்பிரிவுக்கான இணைப்பாளரும் பிரபல வர்த்தக ஆசிரியருமான கே.கே.அரஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கு நிதியுதவிகள் வழங்கும் நிகழ்வு, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இதன்போது, குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கே.கே.அரஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஊடாக கிராமிய ரீதியான பொருளாதாரம் வலுவாக கட்டமைக்கப்படுவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கல்விக்கும் கலாசார விடயங்களுக்கும் அதிகளவான நிதிகள் இந்த வரவு செலவு திட்டம் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கே.கே.அரஸ் கூறியுள்ளார்.
அத்துடன், சமூகத்தினை நல்வழிப்படுத்தக்கூடிய வகையில் ஆலய நிர்வாகங்கள் செயற்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.