300 பில்லியன் யூரோ மதிப்பிலான உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம், அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்துக்கு ‘குளோபல் கேட்வே’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சீனா முன்னெடுத்து வரும் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு மாற்றாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிதி சார் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருக்கும் முதல் தீவிர நடவடிக்கையைக் இது குறிக்கிறது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன் கூறுகையில், ‘குளோபல் கேட்வே திட்டம் நம்பகமான திட்டமாக உருவெடுக்க வேண்டும். நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக் கூடிய திட்டங்களை வடிவமைக்க உலக நாடுகளுக்கு நம்பகமான கூட்டாளிகள் தேவை.
மாறுபட்ட, ஜனநாயக ரீதியிலான அணுகுமுறை வளரும் நாடுகளின் காலநிலை மாற்றம், உலகப் பொதுசுகாதார பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை கொண்ட மேம்பாட்டு இலக்கை அடைய உதவும் என்பதை நிரூபித்துக் காட்ட விரும்புகிறது’ என கூறினார்.
உறுப்பு நாடுகள், நிதி நிறுவனங்கள், தனியார் துறையினரிடமிருந்து திரட்டும் நிதியை எப்படி எங்கு பயன்படுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது. இத்தொகையில் பெரும்பகுதி மானியங்களாக வழங்கப்படுவதற்கு பதிலாக, உத்தரவாதங்களாகவோ கடன்களாகவோ வழங்கப்பட உள்ளது.
வளரும் நாடுகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்றால் குளோபல் கேட்வே திட்டத்தை சீனா வரவேற்கிறது என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சீன தூதர் ஷாங் மிங் கடந்த மாதம் ஒரு சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் தந்திரம் ஆபிரிக்கா, ஆசியா, இந்தோ பசிபிக், ஐரோப்பிய ஒன்றியம் வரை பரவிவிட்டது.
புதிய வீதிகள், துறைமுகங்கள், ரயில் தடங்கள், பாலங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், சீனா பல்வேறு வர்த்தக தொடர்புகளை மேம்படுத்திக் கொண்டது. மேலும் தன் கடன்கள் மூலம் நாடுகளை வளைத்துப் போடுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.