நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துமாறு மாத்தறை மாநகர சபைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மாத்தறை மாநகர சபை அதிகாரிகள் மற்றும் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை அதிகாரிகளுடன் பாராளுமன்ற குழு அறை 02இல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாத்தறை நகரில் வாழும் மற்றும் நகருக்கு வருகைத்தரும் மக்களுக்கு மிகவும் வசதியான சூழல் மற்றும் நகர்ப்புற வசதிகளுடன் கூடிய பிரதேசத்தை உருவாக்குவதே மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தின் நோக்கமாகும்.
மாத்தறை நகரின் நிர்வாக செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல், பொது வைத்தியசாலையை நவீனமயப்படுத்தி வசதிகளை ஏற்படுத்துதல், முறையான வாகன தரிப்பிடத்தை நிர்மாணிப்பது அவசியமானது என சுட்டிக்காட்டிய ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும, நகர மண்டபம் இல்லாத ஒரே மாநகர சபை மாத்தறையாகும்.
புதிய அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாத்தறை மாநகர சபை மற்றும் மாத்தறை பொது வைத்தியசாலையின் உதவி தேவை என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு அமைய, மாத்தறை நில்வலா ஆற்றங்கரை பூங்காவின் பாதுகாப்பு வேலியை விரைவாக அமைக்குமாறு கௌரவ பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மாத்தறை நகரின் வாகன நெரிசலை குறைத்தல், அகுரஸ்ஸ நகரை அண்மித்த வீதிகளை அகலப்படுத்துதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, கஞ்சன விஜேசேகர, ரொஷான் ரணசிங்க, நாலக கொடஹேவா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கொடகொட, கருணாதாச கொடிதுவக்கு, நிபுன ரணவக, வீரசுமன வீரசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முணசிங்க, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, சிரேஷ்ட உதவி செயலாளர் பிரியங்க நாணயக்கார, பிரதமரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் உதித லொகுபண்டார, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உதய நாணயக்கார, பணிப்பாளர் நாயகம் என்.பீ.கே.ரணவீர, மாத்தறை மாநகர சபை மேயர் ரஞ்சித் யசரத்ன, நகர ஆணையாளர் காஞ்சன தல்பாவில, மாத்தறை மாவட்ட பணிப்பாளர் வைத்தியர் மல்காந்தி மெதிவக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.