அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக சுதந்திர கட்சி இருக்கின்றது. ஆனாலும் அதன் தவறான செயற்பாடுகளுக்கும் தீர்மானங்களுக்கும் துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது என ரோஹன லக்ஸ்மன் பியதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போதைய அரசாங்கத்தை பல்வேறு எதிர்ப்பார்ப்புக்களுடன் மக்கள் ஆட்சிபீடம் ஏற்றினர். ஆனால் அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் பெரும்பாலான செயற்பாடுகள் அனைவர் மத்தியிலும் அதிருப்தியையே ஏற்படுத்தி இருக்கின்றன. ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியிலுள்ள 11 பங்காளி கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெகுவிரைவில் வெளியேறலாம் எனவும் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார்.