ஐரோப்பா இராணுவ மோதலின் கொடுங்கனவுக்கு திரும்பி கொண்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார்.
சுவீடனின் நடந்த ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய லாவ்ரோவ், நேட்டோ கூட்டமைப்பு உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளை நோக்கி மேலும் விரிவடைவதை தடுக்க புதிய ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தம் போடும் யோசனையைப் பகிர்ந்தார்.
இந்நிலையில் உக்ரைனுடன் மோத எண்ணினால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்காவின் வெளியுறத்துறை அமைச்சர் ஆண்டனி ப்ளின்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை பலப்படுத்திய நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ரஷ்யா 90,000 படைகளை குவித்து வைத்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
உக்ரைனுடனான அதன் எல்லைகளுக்கு அருகே ரஷ்யா படைகளை குவிப்பது இந்த ஆண்டு இரண்டாவது முறையாகும். எனினும், உக்ரைன் மீதான தாக்குதலுக்குத் தயாராகி வருவதை மாஸ்கோ மறுத்துள்ளது.
பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், உக்ரேனிய பாதுகாப்பு சேவை முகவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேரை வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மூவரில் ஒருவர் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார், மற்ற இருவரும் உளவுத் தகவல்களைச் சேகரிக்க முயன்றதாக ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
உக்ரைன் தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளிங்கன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் அவரது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையில் எதிர்காலத்தில் நேரடி பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டினார்.
புடின்- பைடன் சந்திப்பு, எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் நம்புகிறது. ஆனால் திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
ஜூன் மாதம் ஜெனிவாவில் இரு தலைவர்களுக்கு இடையே நடந்த உச்சிமாநாட்டில் உக்ரைனின் எல்லைக்கு அருகே ரஷ்ய துருப்புக்களை கட்டியெழுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது.
பாதுகாப்புக் கூட்டணியில் அங்கம் வகிக்காத உக்ரைனில் நேட்டோ தனது இருப்பைக் கட்டுப்படுத்தும் என்ற அமெரிக்காவின் உத்தரவாதத்தை ரஷ்யா கோரும் என்று இந்த வார தொடக்கத்தில் ஜனாதிபதி புடின் கூறினார்.