நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று உறுதியான பெண் குறித்து நேற்று வரை எந்த தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாட்டுப் பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பும் பயணிகளை வழிநடத்துவதில் பாரிய பிரச்சினை உள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
குறித்த பெண்ணும் அவரது கணவரும் நவம்பர் 24ஆம் திகதி நைஜீரியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இவர்களை தனிமைப்படுத்திய விடயம் உள்ளிட்டவை குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கதிற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கூறினார்.
இந்த சூழ்நிலையில் அவருடன் தொடர்பினை பேணியவர்கள் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படவில்லை என்றும் உபுல் ரோஹன தெரிவித்தார்.
தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத குறித்த பெண் எவ்வாறு வெளிநாடு சென்றார் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுகாதாரக் கண்காணிப்புச் செயற்பாடுகள் தொடர்பாக மிகுந்த கவலையளிப்பதாக உபுல் ரோஹன தெரிவித்தார்.
எனவே நாட்டில் பாதிக்கப்பட்ட மற்ற நபர்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதனாலேயே கடந்த சில நாட்களாக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.