நாடாளுமன்றத்தில் எங்களுடைய உரிமைக்குரல் நசுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்றைய நாடாளுமன்றத்தில் அதிமுக்கிய அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவிக்க இருந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய ஜனநாயக உரிமை மீறி ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தாக்க முற்பட்டதன் விளைவாக நானும் என்னுடைய சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.
இன்றைய தொழில் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பெருந்தோட்ட மலையக மக்கள் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதால் இன்றைய விலைவாசிக்கேற்ப அவர்களுடைய நாளாந்த வேதனம் 2,500 ரூபாய் ஆக உயர்த்தப்பட வேண்டும். உடனடியாக சம்பள நிர்ணய சபை ஒன்று கூட வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன் வைக்க இருந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய பேச்சுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.