நைஜீரிய பயணத்துடன் தொடர்புடைய 21 ஒமிக்ரோன் நோயாளிகள் சமீபத்திய நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பிரித்தானிய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
ஒமிக்ரோனுடன் தொடர்புடைய வழக்குகளின் அடிப்படையில் தென்னாபிரிக்காவிற்கு அடுத்தபடியாக நைஜீரியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்தார்.
எனவே தடுப்பூசிகளை கொரோனா வைரஸுக்கு எதிரான நாட்டின் முதல் பாதுகாப்பு என்பதனால் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் 26 ஒமிக்ரோன் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 25 இங்கிலாந்திலும் ஒன்று ஸ்காட்லாந்திலும் பதிவாகியுள்ளன.
அந்த எண்ணிக்கை இங்கிலாந்தின் மொத்த ஒமிக்ரோன் நோயாளிகளின் எண்ணிக்கையை 129 ஆக கொண்டுவந்துள்ள அதேநேரம் ஸ்கொட்லாந்தில் இதுவரை 30 நோயாளிகளும் வேல்ஸில் ஒரு நோயாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா புதிய பயண கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ள நிலையில் பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளதாக ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஷ் அரசாங்கங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.