கடந்த வாரம் கால் கிலோ 60 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மரக்கறிகளை இந்த வாரம் 90 ரூபாய்க்கே வாங்கக் கூடியதாக உள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உரப் பிரச்சினையால் ஒரு போக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இது நெல்லின் விலையில் தாக்கம் செலுத்தும். அரசாங்கம் செயற்கை உரத்துக்கான மானியத்தை நிறுத்தியிருப்பதோடு செயற்கை உர இறக்குமதியை தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறது. எனவே இனி தனியார் வைத்ததுதான் உரத்தின் விலை.
இது காரணமாகவும் அரிசியின் விலை அதிகரிக்கலாம்.எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் பொருட்களின் விலை அதிகரிப்பை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. வைரஸ் தொற்று தொடங்கியதிலிருந்து விலைகள் எகிறிக்கொண்டே போகின்றன.
எந்த ஒரு பொருளின் விலையையும் அரசாங்கத்தால் குறைக்க முடியவில்லை. கடந்த மாதத்தோடு நாட்டின் பணவீக்கம் 9.9 வீதமாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த 13 ஆண்டுகளின் பின் ஏற்பட்ட அதிகரிப்பு என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
போதாக்குறைக்கு புதிய வைரஸ் பற்றிய அச்சுறுத்தல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அரசாங்கம் ஒவ்வொரு பிரச்சினையாக தீர்க்க முயற்சிக்கின்றது. ஆனால் ஒன்றை தீர்க்க இன்னொன்று மேலெழுகிறது. அல்லது புதிதாக ஒன்று கிளம்புகிறது.
முதலில் வெளியுறவுப்பரப்பில் அரசாங்கம் தன்னை சுதாகரித்துக் கொள்ள முற்பட்டது. அமைச்சர்களை மாற்றி புதிய தூதுவர்களை அனுப்பி வெளியுறவுப் பரப்பில் தன்னை சுதாகரித்துக் கொண்டது. அதே காலப்பகுதியில் தடுப்பூசிகளை விரைவாக ஏற்றி வைரஸ் தொற்று வேகத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி நாட்டை சமூக முடக்கத்திலிருந்து விடுவித்தது.
அதன்பின் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்தது. ஆனால் இந்த சுதாகரிப்புக்களின் மூலமும் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. போதாக்குறைக்கு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பான செய்திகள் மக்களை பீதியுற வைக்கின்றன. உண்மையில் இதுவரை கிடைக்கப்பெற்ற பெரும்பாலான செய்திகளில் சிலிண்டர்கள் வெடிக்கவில்லை. அடுப்புகள் தான் வெடித்திருக்கின்றன.
ஆனால் அது சிலிண்டர் வெடிப்பாகத்தான் காட்டப்படுகிறது. இதுவரையிலும் அவ்வாறான வெடிப்புச் சம்பவங்களில் ஒரே ஒரு பெண்தான் கொல்லப்பட்டிருக்கிறார். சிலர் காயமடைந்திருக்கிறார்கள். எனினும் விவகாரம் நாட்டு மக்களை பீதியுறவைக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது.
ஜனாதிபதி யுத்தத்தை வென்றதில் மட்டும்தான் கெட்டிக்காரர்.ஏனைய விடயங்களில் அவர் கெட்டித்தனமானவரல்ல என்ற அபிப்பிராயம் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
ஆனால் நாட்டை ஆளும் சகோதரர்கள் நம்புகிறார்கள் யுத்த வெற்றியை திரும்பத் திரும்ப சிங்கள மக்கள் மத்தியில் நினைவுபடுத்துவதன் மூலம் ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்று. அதுமட்டுமல்ல அந்த வெற்றியை முதலீடாக வைத்து வம்ச ஆட்சி ஒன்றை நாட்டில் ஸ்தாபிக்கலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே அந்த கனவு அவர்களிடம் காணப்பட்டது. அம்பாந்தோட்டை மையமாகக் கொண்ட ஒரு வம்ச ஆட்சியை உருவாக்குவதே அக்கனவு ஆகும். இதுவரையிலும் நாட்டை ஆட்சி செய்த வம்சங்கள் கண்டி மைய சிங்கள உயர் குளத்தைச் சேர்ந்தவை. கண்டி மைய சிங்கள உயர் குழாத்தைச் சேர்ந்தவர்களால் போரை வெல்ல முடியவில்லை. புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க முடியவில்லை. அதை ராஜபக்ஷ வம்சம்தான் சாதித்து காட்டியது.
எனவே அந்த சாதனையின் மீது அம்பாந்தோட்டையை மையமாகக் கொண்ட ஒரு வம்ச ஆட்சியை ஸ்தாபிக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.போர் வெற்றியை ஒரு குடும்பத்துக்கு உரியதாக மாற்றி அதை ஒரு கட்சிக்கு உரியதாக மாற்றி தாமரை மொட்டு கட்சியை அவர்கள் உருவாக்கிவிட்டார்கள்.
அக்கட்சியை மிகக் குறுகிய காலத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறும் ஒரு வளர்ச்சிக்கு கொண்டுவர முடிந்த மைக்கு காரணம் போர் வெற்றிகளும் ஈஸ்டர் குண்டுவெடிப்பின் விளைவுகளும் தான்.
எனவே அம்பாந்தோட்டையை மையமாகக் கொண்ட ஒரு வம்ச ஆட்சியை உருவாக்குவது என்று சொன்னால் போர் வெற்றியை சிங்கள மக்கள் மறந்து விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி தன்னுடைய ஆட்சியின் இரண்டாவது ஆண்டு முடிவையொட்டி திறந்துவைத்த தாதுகோபுரம் அப்படிப்பட்ட ஒரு நோக்கத்தைக் கொண்டதுதான்.
அது யுத்த வெற்றியை வணக்கத்திற்கு உரியதாக மாற்றுகிறது.இவ்வாறு அம்பாந்தோட்டை மையச் சிந்தனையின் அடுத்த கட்ட வளர்ச்சியாகத்தான் ஒரு புதிய யாப்பை அவர்கள் உருவாக்கத் திட்டமிடுவதாக தென்னிலங்கை மைய ஊடகவியலாளர்கள் நம்புகிறார்கள்.
இலங்கைத்தீவில் இதுவரையிலும் உருவாக்கப்பட்ட எல்லா யாப்புக்களும் கண்டிச் சிங்கள உயர்குழாத்தின் தயாரிப்புக்கள். எனவே அம்பாந்தோட்டையை மையமாகக் கொண்ட ஒரு புதிய யாப்பை உருவாக்கி அதில் தமது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்றும் அவர்கள் சிந்திப்பதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு புதிய யாப்புக்குரிய முதல் வரைபு வெளிவந்துவிடும் என்று மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.
அப்படியொரு யாப்பு வந்தால் அதற்குள் என்ன இருக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. சுமந்திரனை அமெரிக்காவில் சந்தித்த அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் அது தெரியுமோ தெரியவில்லை. அல்லது இந்தியாவுக்கு அதைப்பற்றி ஏதும் தெரிந்திருக்குமோ தெரியவில்லை. அந்த யாப்புக்குள் தமிழ் மக்களுக்குரிய தீர்வாக எப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும் என்பது குறித்தும் யாரிடமும் எந்த ஊகமும் கிடையாது.
இப்படிப்பட்டதொரு பின்னணிக்குள் அந்த யாப்பானது அம்பாந்தோட்டைமைய சிந்தனையின் விளைவாக வரலாம் என்று ஊகித்தாஸ் அது யுத்த வெற்றியை அடுத்தகட்டத்துக்கு ஸ்தாபிக்கும் ஒரு நோக்கத்தைக் கொண்டதாகவே அமையக்கூடும். அதாவது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதைப் போல யுத்த வெற்றியை ஓர் அரசியல் வெற்றியாக மாற்றி தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிப்பது.
இந்த அடிப்படையில்தான் ஒரு புதிய யாப்பு வெளிவரலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்து வருகிறது.அந்த யாபானது ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாகாண கட்டமைப்பை ஒன்றில் இல்லாமல் செய்யலாம் அல்லது அகற்றலாம் என்ற ஊகங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த ஊகங்களின் பின்னணியில்தான் இந்தியா கூட்டமைப்பை டெல்லிக்கு வருமாறு அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செய்திகளின்படி கூட்டமைப்பின் தூதுக் குழு சில நாட்களுக்குள் இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டும் ஆனால். அப்பயணம் கூட்டமைப்பினரால் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு.
ராஜபக்ச சகோதரர்களின் யாப்பு எப்படி அமையப் போகிறது என்பது ஒருபுறமிருக்க அவர்களுடைய அம்பாந்தோட்டை மையச் சிந்தனையின்படி அவர்கள் வேறு ஒரு விடயத்தை குறித்தும் சிந்திப்பதாக ஊகிக்கப்படுகிறது.
அது என்னவெனில் அம்பாந்தோட்டையையை மையமாகக் கொண்ட ஒரு புதிய புத்தமத பீடத்தை உருவாக்குவது. ஏற்கனவே உள்ள பௌத்த மத பீடங்களுடன் சேர்ந்து புதிதாக ஒரு பீடத்தை உருவாக்கி அதையும் தமது வம்ச ஆட்சிக்கு ஒரு பலமாக கட்டியெழுப்புவதற்கு அவர்கள் சிந்திப்பதாக ஓர் ஊகம் தென்னிலங்கையில் காணப்படுகிறது.
இவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தல், அவர்களிடம் புராதன மன்னர்களைப் போல ஒரு வம்ச ஆட்சியை உருவாக்கும் மிகத்தெளிவான உள் நோக்கங்கள் இருப்பதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக 20ஆவது திருத்தச்சட்டம் எனப்படுவது ஜனாதிபதியை ஒரு மன்னனுக்கு நிகரான அதிகாரம் உடையவராக மாற்றுகிறது. அவர்கள் ஒரு புதிய யாப்பை உண்மையாகவே உருவாக்க விரும்பினால் அதில் அந்த மன்னருக்குரிய அதிகாரங்களை அனுபவிக்கும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை அகற்றுவார்களா என்ற கேள்விக்கு விடை முக்கியம்.
அவ்வாறு நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி முறைமையைப் பேணும் ஒரு யாப்பைத்தான் அவர்கள் கொண்டுவருவார்களாக இருந்தால் அது நிச்சயமாக நாட்டில் நல்லிணக்கத்தை பாதுகாக்கும் அதாவது பல்லினச் சூழலைப் பாதுகாக்கும் ஒரு கூட்டாட்சி யாப்பாக இருக்குமா?
-நிலாந்தன்-