ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன், இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டினை சந்தித்து, இலங்கையின் சமகால நிலைமைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை உட்பட உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் இதனால் மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார தாக்கங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர், பிரித்தானிய தூதுவரிடம் தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்ற காணி அபகரிப்பு, பிரதேச செயலக எல்லை நிர்ணய மாற்றங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியோதோடு, அது தொடர்பிலான ஆவணங்களும் பிரித்தானிய தூதுவரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.